போராட்டத்தால் தொடரும் பதற்றம்; ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் போனில் பேச்சு
போராட்டத்தால் தொடரும் பதற்றம்; ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் போனில் பேச்சு
ADDED : ஜன 15, 2026 07:29 AM

புதுடில்லி: ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னை, அரசியல் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப் படுத்த, இணைய சேவை முடக்கம், ஊடக கட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழலில் தற்போதைய நிலைமை குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சியிடமிருந்து அழைப்பு வந்தது. ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

