‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'
‛காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்': 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு அமெரிக்கா 'சூடு'
ADDED : ஏப் 26, 2025 01:01 AM

வாஷிங்டன்: 'ஜம்மு - காஷ்மீரில் போராளிகள் தாக்குதல்' என செய்தி வெளியிட்டுள்ள, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அரசு, 'அது பயங்கரவாத தாக்குதல்' என, தெளிவுபடுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது, எப்போதுமே இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் குறித்து செய்தி வெளியிடும் பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதை, 'ஊடுருவல்' என்றே குறிப்பிடுகின்றன.
அதுவே, காஷ்மீர் விவகாரம் குறித்து செய்தி வெளியிடுகையில், 'பாக்., ஊடுருவல்' என்பதற்கு பதிலாக, 'காஷ்மீர் பிரச்னை' என்றே குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், 'காஷ்மீர் போராளிகளால், 24 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என, தலைப்பிட்டது.
இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தியை இணைத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். அதில் எந்த குழப்பமும், மாற்றமும் இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதம் என்று வரும்போது நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி நிற்கிறது' என, குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த தலைப்பில் உள்ள, 'போராளிகள்' என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதில், 'பயங்கரவாதம்' என குறிப்பிட்டதுடன், 'உங்கள் சார்பில் நாங்களே திருத்தம் செய்துவிட்டோம்' என்றும் குறிப்பிட்டுள்ளது.