இஸ்ரேல் பிரதமரை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்!: வீட்டின் மீது ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு
இஸ்ரேல் பிரதமரை கொல்ல பயங்கரவாதிகள் சதி திட்டம்!: வீட்டின் மீது ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு
ADDED : அக் 20, 2024 12:15 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் நேற்று 'ட்ரோன்' தாக்குதல் நடத்தினர். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இரு பயங்கரவாத அமைப்புக்கும் ஆதரவு அளிக்கும் ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.
தீவிரம்
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வரிசையில், இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்., 7ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் யாஹ்யா சின்வாரை, இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் கொன்றது.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹமாஸ், ஹெஸ்பொல்லா தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இஸ்ரேல் நோக்கி, ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று அதிகாலையில், தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது. அவை நடு வழியிலேயே தகர்க்கப்பட்டன.
பழிவாங்கும் நடவடிக்கை
இந்நிலையில், மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள கேசராஸ் பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் செலுத்தப்பட்டது. இது உடனடியாக அழிக்கப்பட்டது.
இந்த ட்ரோன் தாக்குதல் முயற்சியை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் அந்த ட்ரோன் செலுத்தப்பட்ட போது, நெதன்யாகு, அவரது மனைவி அந்த வீட்டில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
யாஹ்யா சின்வார் கொலைக்கு பழிவாங்கும் வகையில், லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் தன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
முக்கிய தளபதி பலி?
அதுபோலவே, லெபனானை நோக்கி வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவம், தரைவழி தாக்குதலிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நாசர் ரஷீத் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

