இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 534 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா: 12க்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 534 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா: 12க்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்
UPDATED : நவ 24, 2024 03:35 PM
ADDED : நவ 24, 2024 02:58 PM

பெர்த்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 533 ரன்கள்
முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள்,
விராட் கோலி 100 ரன்கள் குவித்தனர். 534 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் முடிவில் 12 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய
அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில்
பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய
அணி முதல் இன்னிங்சில் 104 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா
5, ஹர்ஷித் 3, சிராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர். பின் 46 ரன் முன்னிலையுடன்
இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்திய அணி.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு
சாதகமாக மாற, ராகுல், ஜெய்ஸ்வால் அசத்தினர். ஆஸ்திரேலிய 'வேகங்களை' எளிதாக
சமாளித்தனர். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில்
விக்கெட் இழப்பின்றி, 172 ரன் எடுத்து, 218 ரன் முன்னிலையுடன் வலுவான
நிலையில் இருந்தது. ராகுல் (62), ஜெய்ஸ்வால் (90) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜெய்ஸ்வால் 161, கோலி 100
![]() |
இன்று
(நவ.,24) 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்திய அணி. ராகுல் 77 ரன்னில்
ஸ்டார்க் பந்தில் கேட்சானார். அடுத்துவந்த தேவ்தத் படிகல் 25 ரன்னில்
வெளியேறினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், 150 ரன்களை கடந்து, 161 ரன்களில்
அவுட்டானார். ரிஷாப் பன்ட், துருவ் ஜூரல் தலா 1 ரன்னில் பெவிலியன்
திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு 29 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்தார். அத்துடன் இந்திய
அணி டிக்ளேர் செய்தது. விராட் கோலி 100 ரன், நிதிஷ் ரெட்டி 38 ரன்னுடன்
அவுட்டாகமல் இருந்தனர்.
134.3 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்
இழப்பிற்கு 487 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன்
சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.
ஆஸி., தடுமாற்றம்
இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரே அடி விழுந்தது. பும்ரா வேகத்தில் துவக்க வீரர் நாதன் ‛டக்' அவுட்டானார். அடுத்துவந்த கேப்டன் கம்மின்ஸ் (2), லபுசேன் (3) சொற்ப ரன்களில் வெளியேற 12 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்தது. அத்துடன் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா 2, சிராஜ் 1 விக்., வீழ்த்தினர்.