கம்போடியா உடனான பிரச்னையில் யாருடைய சமரசமும் தேவையில்லை: தாய்லாந்து நிராகரிப்பு
கம்போடியா உடனான பிரச்னையில் யாருடைய சமரசமும் தேவையில்லை: தாய்லாந்து நிராகரிப்பு
ADDED : ஜூலை 26, 2025 03:52 AM

பாங்காக்: கம்போடியா உடனான எல்லை பிரச்னையில் பிற நாடுகள் சமரச பேச்சுக்கு முயற்சித்த நிலையில், 'மூன்றாம் நாடுகளின் சமரசம் தேவையில்லை' என தாய்லாந்து நிராகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக இருந்து வந்த எல்லை பிரச்னை நேற்று முன்தினம் மோதலாக வெடித்தது.
ஹிந்து கோவில் இரு நாடுகளும் 800 கி.மீ., துார எல்லையை பகிர்ந்துள்ளன. தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள 2 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி, 'எமரால்டு முக்கோணம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள பழமையான ஹிந்து - -புத்த கோவிலுக்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கோருவதே பிரச்னைக்கு முக்கிய காரணம்.
இந்த பகுதியில் இரு நாட்டு படையினரும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதலில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதற்கு தன் நாட்டின் ராணுவ தளபதியே பொறுப்பு என கம்போடியா முன்னாள் பிரதமரிடம் பேசிய தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவின் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தாய்லாந்து மாகாணமான சுரின் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீன்ச்சே இடையேயான எல்லையில் நேற்று முன்தினம் மோதல்கள் துவங்கின.
ஏவுணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். கம்போடியாவில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.
சமரச பேச்சு இரண்டாவது நாளாக நேற்றும் இரு நாடுகளுக்கிடையே தீவிர தாக்குதல் தொடர்ந்தது. இந்நிலையில், 'ஆசியான்' எனப்படும், தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் தாய்லாந்து மற்றும் கம்போடியா அங்கம் வகிக்கின்றன.
'ஆசியான்' பிராந்திய கூட்டமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் மலேஷியா உடன் இணைந்து அமெரிக்கா, சீனா ஆகியவை இருநாடுகளுக்கிடையே சமரச பேச்சை எளிதாக்க முன்வந்தன. ஆனால் தாய்லாந்து இந்த உதவியை நிராகரித்து விட்டது.
கம்போடியாவுடன் பேச் சு நடத்தி தீர்வு காணவே விரும்புவதாகவும், இதில் மூன்றாம் நாடுகளின் சமரசத்துக்கு இதுவரை தேவை ஏற்படவில்லை என்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலன்குரா தெரி வித்தார்.