ADDED : அக் 25, 2025 11:51 PM

பாங்காக்: தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகிட் கிடியாகரா, 93, உடல் நலக்குறைவால் காலமானார்.
ஆசிய நாடான தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாய் ராணி சிரிகிட் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார்.
பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் பிரிந்ததாக அரண்மனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி சிரிகிட், தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார். இந்த அரச தம்பதியினர் பொதுச் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
சமூக சேவைகள், கிராமப்புற ஏழைகளுக்கான திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய கைவினைத்திறன் பாதுகாப்புக்கான பங்களிப்புகள் போன்றவற்றால் ராணி சிரிகிட், 'தேசத் தாய்' என மக்களால் போற்றப்பட்டவர்.
அவரது மரணத்தையடுத்து, தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கற்கும் மலேஷிய பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார். தாய்லாந்தில் ஓர் ஆண்டுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

