சைபர் குற்ற கும்பலிடம் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் தாய்லாந்தில் தவிப்பு அழைத்து வர தனி விமானம் அனுப்பியது மத்திய அரசு
சைபர் குற்ற கும்பலிடம் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் தாய்லாந்தில் தவிப்பு அழைத்து வர தனி விமானம் அனுப்பியது மத்திய அரசு
ADDED : அக் 30, 2025 12:41 AM
நேப்பிடோ: மியான்மரில் இருக்கும் சைபர் குற்ற கும்பலிடம் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சமடைந்த 500 இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர மத்திய அரசு தனி விமானத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை என்று கூறி இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆசைக் காட்டி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுத்த வைக்கப்படுகின்றனர்.
அதில் தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மர் முக்கியமானதாக உள்ளது.
மியான்மரின் கே.கே. பூங்கா, நாடு கடந்த சைபர் மோசடிகளில் ஈடுபடுவதற்கு பெயர் பெற்றது. கே.கே. பூங்கா மற்றும் அருகிலுள்ள பிற வளாகங்கள், நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த மோசடி கும்பல்களால் நடத்தப்படுகின்றன.
கடந்த வாரம் கே.கே. பார்க் வளாகத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது இந்தியர் உட்பட சுமார் 700 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
எல்லை தாண்டியபோது அவர்கள், அண்டை நாடான தாய்லாந்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அங்கு தடுத்து வைக்கப் பட்டுள்ள 500 இந்தியர்களின் நிலைமையை அறிந்த நம் வெளியுறவு அமைச்சகம், அவர்களை நாட்டிற்கு அழைத்து வர தனி விமானத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதை தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.

