இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டை ஓயவில்லை: பதிலுக்கு பதில் தாக்குவதால் பதற்றம் நீடிப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டை ஓயவில்லை: பதிலுக்கு பதில் தாக்குவதால் பதற்றம் நீடிப்பு
UPDATED : ஜூன் 16, 2025 07:06 AM
ADDED : ஜூன் 16, 2025 12:53 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் துவங்கி மூன்று நாட்களை கடந்தும் இரு தரப்பிலும் பதிலடி தாக்குதல் தொடர்கிறது. நேற்றைய மோதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள போலீஸ் தலைமையகத்தை இஸ்ரேல் ஏவுகணை தாக்கியது. அதே போல் ஈரானின் ஏவுகணை, இஸ்ரேலின் தம்ரா நகர குடியிருப்புகளில் விழுந்தது. இதில் நான்கு இஸ்ரேலியர்கள் இறந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல், அணு ஆயுத அச்சுறுத்தல் காரணமாக ஈரான் மீது கடந்த 13ம் தேதி 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் தாக்குதலை துவங்கியது. இதில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் ஆகியவை சேதமடைந்தன.
ஈரான் ராணுவம் மற்றும் அதன் துணை பிரிவான புரட்சிப் படையைச் சேர்ந்த ஐந்து முக்கிய தளபதிகள் உயிரிழந்தனர். மேலும், அணு விஞ்ஞானிகள் பலரும் குறிவைத்து வீழ்த்தப்பட்டனர்.
நடுவானில் அழிப்பு
மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல்களால், 'ஈரானில் மொத்த பலி எண்ணிக்கை 406 ஆனது. காயமடைந்தோர் எண்ணிக்கை 654 ஆக உயர்ந்துள்ளது' என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு பதிலடி தரும் விதமாக ஈரானும் 'ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில் தாக்குதலில் இறங்கியது.
நேற்று அதிகாலை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. இவற்றில் பெரும்பாலானவை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன.
சில ஏவுகணைகள் டெல் அவிவ் நகருக்கு அருகே உள்ள பேட் யாமில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்தன. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். தம்ரா நகரில் நடந்த ஈரானின் மற்றொரு தாக்குதலில் நான்கு பேர் இறந்தனர்.
அதுமட்டுமின்றி இஸ்ரேலின் ஹைபா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியது.
இதில் சில பைப்லைன்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும், சுத்திகரிப்பு நிலையம் செயலில் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
இதுவரையிலான தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிக்கை:
கடந்த 13ம் தேதி முதல் ஈரான் 270 ஏவுகணைகளை வீசி, 22 இடங்களைத் தாக்கியுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 390 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 30 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 351 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
நெதன்யாகு ஆவேசம்
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான சில இடங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் பார்வையிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஈரான் வேண்டுமென்றே பொது மக்கள், பெண்கள், குழந்தைகளை- கொன்றுள்ளது.
''இதற்கு அவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுப்பர். மிகுந்த பலத்துடன் தாக்குதல் நடத்துவோம்,'' என ஆவேசமாக கூறினார்.
அவர் கூறிய சில மணிநேரங்களில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள போலீஸ் தலைமையகம், இஸ்ரேஸ் படைகளால் ட்ரோன் வாயிலாக தாக்கப்பட்டது.