ADDED : நவ 09, 2025 01:03 AM

நியூயார்க்:டி.என்.ஏ.,வை கண்டுப்பிடித்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் டி வாட்சன், 97 வயதில் காலமானார்.
அமெரிக்க உயிரியலாளரான ஜேம்ஸ் டி வாட்சன், பிரிட்டன் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் இணைந்து, 1953ம் ஆண்டில் டி.என்.ஏ., எனப்படும் மரபணுவின் இரட்டைச் சுருள் அமைப்பை கண்டுப்பிடித்தனர்.
டி.என்.ஏ.,வை முதன்முதலில் கண்டறிந்தது சுவிட்சர்லாந்து விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்றாலும், அதன் கட்டமைப்பை உலகிற்கு காட்டியது ஜேம்ஸ் வாட்சன் குழு. இது உயிரியல் துறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு வழி வகுத்தது.
இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும், 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதாக லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது.

