நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு; புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்; அதிபராக தேர்வான அனுரா அழைப்பு!
நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு; புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்; அதிபராக தேர்வான அனுரா அழைப்பு!
UPDATED : செப் 23, 2024 10:58 AM
ADDED : செப் 22, 2024 08:01 PM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாளை அனுரா அதிபராக பதவியேற்கிறார். 'நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு: புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்' என்று அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் போட்டி
பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பிறகு, இலங்கை மெல்ல மெல்ல தலைதூக்கி வரும் நிலையில், அந்நாட்டு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.
வரலாறு
முதல் விருப்ப ஓட்டு எணணிக்கை முடிவில், அனுரா 39 சதவீதம் ஓட்டுகளும், சஜித் 34 சதவீதம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இரண்டாம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை முடிவில், அனுராவுக்கு 42.31 சதவீதம் ஓட்டுகளும், சஜித்துக்கு 32.76 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்திருந்தன. இருவரிடையே கடும் இழுபறி நிலவி வந்த நிலையில், அனுரா குமாராவை வெற்றியாளராக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் அதிபர் பதவியை கைப்பற்றிய முதல் இடதுசாரி என்ற சிறப்பை அனுரா திசநாயகே பெற்றார்.
முதல் அறிக்கை
புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட அனுரா குமாரா திசநாயகே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல நூற்றாண்டுகளாக உருவான கனவு இறுதியாக வெற்றியடைந்துள்ளது. இது ஒரு எந்தவொரு தனிமனிதனின் பணியால் ஏற்பட்ட சாதனையல்ல. உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் ஏற்பட்ட சாதனை. உங்கள் அர்ப்பணிப்பால், இந்த நிலையை அடைந்துள்ளோம். அதற்காக நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த வெற்றியானது, நம் அனைவரையும் சேரும். தங்கள் வியர்வையையும், கண்ணீரையையும், உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்த பல ஆயிரக்கணக்கானோரின் தியாகத்தால் இந்த நிலையை அடைந்தோம். அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.நமது பொறுப்பை உணர்ந்து அவர்களது நம்பிக்கையையும், போராட்டத்தையும் உயர்த்திப் பிடிப்போம்.
புது மறுமலர்ச்சி
நம்பிக்கையுடன் வாக்களித்த லட்சக்கணக்கான மக்களை நம்முடன் சேர்த்து முன் அழைத்துச் செல்வோம், இலங்கையின் புதிய சரித்திரத்தை படைக்கத் தயாராவோம். சிங்கள, தமிழ், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையே, இந்த புதிய சாதனையை படைப்பதற்கு காரணமாகியுள்ளது. இந்த பலத்துடன் ஒருங்கிணைந்து எதிர்காலத்தை உருவாக்கவும், புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தவும் பாடுபடுவோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.