ADDED : ஏப் 02, 2026 06:13 PM
டெஹ்ரான்: ஈரானின் ஆட்சி அதிகாரத்தின் துாணாக விளங்கிய அயத்துல்லா அலி கமேனி மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது.
இந்திய நேரப்படி, அதிகாலை 3:07 மணிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் சமூக வலைதள பக்கத்தில், 'வரலாற்றின் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்' என பதிவிட்டிருந்தார். இதன் பின், அவர் உயிரிழந்ததை ஈரான் அரசு ஊடகங்களும் உறுதிப்படுத்தின.
கடந்த 1989ல், ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கமேனி, 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் நீடித்து வந்தார். கடந்த, 1999ல் மாணவர் போராட்டங்கள், 2009ல் தேர்தல் எதிர்ப்பு போராட்டங்கள், 2019ல் நடந்த போராட்டங்கள் மற்றும் சமீபத்திய 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' இயக்கம் என அனைத்து மக்கள் போராட்டங்களையும் அவர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினார்.
கமேனியின் மரணம், அந்நாட்டின் உள்நாட்டு கொள்கைகளிலும், அரசியலிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஈரானிய அரசியல் அமைப்பில் உச்சத் தலைவர் என்பது வெறும் பெயரளவு பதவி அல்ல. ராணுவம், நீதித்துறை மற்றும் வெளியுறவு கொள்கை என அனைத்திலும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டது. கமேனியின் மறைவு, ஈரானின் அதிகார படி நிலைகளில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு கமேனி ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவரது மறைவு இந்த இயக்கங்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம் என கூறப்படுகிறது. கமேனி மறைவுக்கு பின் பொறுப்பேற்கும் புதிய தலைமை, மேற்கத்திய நாடுகளுடன் இணக்கம் காட்டுமா அல்லது கடுமையான போக்கை கடைப்பிடிக்குமா என்பதே உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
ஈரானின் உச்சத் தலைவராவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1981 ஜூன் 27 சனிக்கிழமையன்று, மசூதி ஒன்றில் கமேனி பேசிக்கொண்டிருந்தபோது, டேப்ரெக்கார்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அவரது வலது கை நிரந்தரமாக முடங்கியது. குரல் நாண்களும், நுரையீரலும் பாதிக்கப்பட்டன.
விதியின் விசித்திரம் என்னவென்றால், 45 ஆண்டுகளுக்கு முன் ஒரு சனிக்கிழமையன்று மரணத்தில் இருந்து தப்பிய கமேனி, தற்போது சனிக்கிழமை நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஈரானின் உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி, இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 1989ல் வடகொரியா சென்றதே அவர் வெளிநாடுகளுக்கு சென்ற கடைசி பயணமாகும். அதன் பின், அவர் ஒருமுறை கூட நாட்டை விட்டு வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை சண்டை ஈரான் மீது தாக்குதல் நடத்த சனிக்கிழமை காலை நேரத்தை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் சனிக்கிழமை என்பது யூதர்களின் சப்பாத் எனப்படும் புனித ஓய்வு நாளாகும். பொதுவாக இந்நாளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என ஈரான் நம்பியிருக்கலாம். இந்த நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எதிரிகள் மிகவும் தளர்வாக இருக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்துவது ராணுவ உத்தியாகும்.
மேற்கத்திய நாடுகளுக்கு சனிக்கிழமை வார இறுதி விடுமுறை காலம். எனவே, அன்று தாக்குதல் நடத்தினால், சர்வதேச அரசியல் அழுத்தங்களை சமாளிக்க அமெரிக்காவுக்கும் அவகாசம் கிடைக்கும்.
மேலும், ராணுவ தாக்குதலுக்கு அதிகாலை நேரமே உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், இருட்டில் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி தாக்குவது எளிது. தவிர, விடியற்காலையில் எதிரி நாட்டு ராணுவத்தின் விழிப்புணர்வு சற்று குறைவாக இருக்கும். அவர்கள் உஷாரடைந்து பதிலடி தருவதற்கு நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும். இந்த அம்சங்களை கருத்தில் கொண்டே தாக்குதலை நடத்த இஸ்ரேலும், அமெரிக்காவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.
