இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை அதிகாரி
இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை அதிகாரி
ADDED : பிப் 26, 2024 05:10 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி அமெரிக்க விமானப்படை அதிகாரி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் மருத்துமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 29,092 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர். ஹமாஸ் படையினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை அதிகாரி ரோஸ் ரைலி என்பவர் தீக்குளித்தார். தொடர்ந்து அவர் பாலஸ்தீனர்களை விடுவியுங்கள். இனப்படுகொலையில் ஒருபோதும் நான் பங்கு வகிக்கமாட்டேன் என அலறியபடியே சரிந்து விழுந்தார்.
உடனடியாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த நபரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதில், தூதரக பணியாளர் யாருக்கும் பாதிப்பில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

