ஓயாத நோபல் அமைதிப்பரிசு சர்ச்சை; விருதாளர் பெயர் முன்கூட்டியே கசிந்து விட்டதாக புகார்!
ஓயாத நோபல் அமைதிப்பரிசு சர்ச்சை; விருதாளர் பெயர் முன்கூட்டியே கசிந்து விட்டதாக புகார்!
ADDED : அக் 12, 2025 12:33 PM

ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தேர்வு செய்யப்பட்டவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, விஷயம் கசிந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு, முன் எப்போதும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 7 போர்களை நிறுத்தி விட்டேன். எனக்கு அந்த பரிசை தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே கேட்டார். 'எனக்கு நோபல் பரிசு இல்லாவிட்டால், அது அமெரிக்காவுக்கு நேரிட்ட பெரும் அவமானம்' என்று அதிபர் டிரம்ப் கூறியது தான் இதற்கு காரணம்.
அது மட்டுமின்றி, 'ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு எல்லாம் நோபல் பரிசு கொடுத்தனர்' என்றெல்லாம் வேறு பேசினார். மறைமுகமாகவும், அவரது கட்சியினர் பல வழியிலும் நோபல் பரிசுக்காக பிரசாரம் செய்தனர். இத்தகைய சூழ்நிலையில், வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்வு செய்யப்பட்டார்.
அதை டிரம்பும் ஏற்றுக் கொண்டார். தேர்வான மரியா கொரினா, டிரம்புடன் பேசி, பரிசை டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக கூறி புகழ்ந்து விட்டார். இதோடு சர்ச்சை ஓய்ந்து விடும் என்று பார்த்தால், அப்படி ஓய்வதாக தெரியவில்லை. முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, தேர்வு செய்யப்பட்டவரின் பெயர் வெளியில் கசிந்து விட்டதாக இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
மரியா கொரினாவின் பெயர், முதல் நாள் வரை எந்த ஒரு செய்தி நிறுவனத்தாலும் கணிக்கப்படவில்லை. ஆன்லைன் கணிப்பு நிறுவனங்களிலும் கணிக்கப்படவில்லை.ரஷ்யா எதிர்க்கட்சி தலைவராக இருந்து உயிரிழந்த நவல்னியின் மனைவி யுலியா பெயர் தான் முன்னிலையில் இருந்தது.
ஆனால், பரிசு அறிவிக்கப்படுவதற்கு முதல் நாளன்று, மரியா கொரினாவின் பெயர் ஆன்லைன் கணிப்பு தளமான 'பாலிமார்க்கெட்டில்' முன்னிலைக்கு வந்தது. 73 சதவீதம் பேர் திடீரென மரியா கொரினாவின் பெயரை குறிப்பிட்டனர். இப்படி திடீரென ஒரு பெயர் வெளியானதன் பின்னணியில், தேர்வு செய்யப்பட்ட பெயர் கசிந்து விட்டது காரணமாக இருக்கலாம் என்று நோபல் நிறுவனம் சந்தேகிக்கிறது.
'இது, உளவு பார்த்தல் வேலையாக இருக்கக்கூடும்; உரிய விசாரணை நடத்தப்படும். அவசியமெனில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். வேண்டுமென்றே தகவல் கசியவிட வாய்ப்புகள் குறைவு. ஆனால், நோபல் நிறுவனம் உளவு பார்ப்புக்கு ஆளாகலாம் என்பது அனைவரும் அறிந்தது தான்' என்று அதன் இயக்குனர் கிரிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென் தெரிவித்துள்ளார்.