தீய சக்தி அழிந்துவிட்டது: யாஹ்யா சின்வர் பலி குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு
தீய சக்தி அழிந்துவிட்டது: யாஹ்யா சின்வர் பலி குறித்து இஸ்ரேல் பிரதமர் பேச்சு
ADDED : அக் 18, 2024 01:11 AM

ஜெருசலேம் : தீய சக்தி அழிந்துவிட்டது என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் நேற்று கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறினார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு மூளையாக செயல்பட்டது யாஹ்யா சின்வர் என கூறப்படுகிறது.
இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவராக உள்ள யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்தது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நேற்று வீடியோ வெளியிட்டு பேசியது, ஹமாஸ் தலைவரின் மரணத்தை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் தீமைக்கு மரண அடி விழுந்துள்ளது. தீய சக்தி அழிந்துவிட்டது. பிணை கைதிகளை விடுவிக்கும் வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. யாஹ்யா சின்வர் மரணம் ஹமாஸின் தீய ஆட்சியின் வீழ்ச்சியில் ஒரு முக்கிய அடையாளமாகும் என்றார்.
பைடன் பாராட்டு
நேற்று யாஹ்யா சின்வர் பலியானது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார். விரைவில் தொலை பேசி வாயிலாக பேச உள்ளதாக கூறினார்.