தங்க மாதிரிகள் திருட்டு: பாரீஸ் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி
தங்க மாதிரிகள் திருட்டு: பாரீஸ் அருங்காட்சியகத்தில் அதிர்ச்சி
ADDED : செப் 17, 2025 08:58 PM

பாரீஸ்: பாரிஸின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 5 கோடியே 84 லட்சத்து 71 ஆயிரம் (6 லட்சம் யூரோ)($700,000) ரூபாய் மதிப்புள்ள தங்க மாதிரிகள் திருடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இது பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடமாக இருந்து வருகிறது.
இந்த வரலாற்று அருங்காட்சியகம் டைனோசர் எலும்புக்கூடுகள் மற்றும் டாக்ஸிடெர்மி காட்சிகளுக்குப் பெயர் பெற்றது. மேலும் இது புவியியல் மற்றும் கனிமவியல் காட்சியகத்தையும் கொண்டுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பல பூர்வீக தங்க மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்த பூர்வீக தங்க மாதிரிகள் நேற்று திருடப்பட்டுள்ளதாக இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வெளியிட்ட அறிக்கை:
அருங்காட்சியகத்தில் ஊடுருவல்காரர்கள், ஆங்கிள் கிரைண்டர் மற்றும் ப்ளோ டார்ச்சைப் பயன்படுத்தி, பூர்வீக தங்க மாதிரிகளை திருடிச் சென்று விட்டனர்.
இது, 5 கோடியே 84 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அவை அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பு கொண்டவை ஆகும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த சைபர் தாக்குதலில் அருங்காட்சியகத்தின் எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் செயலிழந்தது.
திருடர்கள் இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.
மத்திய பிரான்சின் லிமோஜஸில் உள்ள அட்ரியன் டுபூச் தேசிய அருங்காட்சியகம் இந்த மாத தொடக்கத்தில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. அந்த சம்பவமே இன்னும் புதிராக உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.