'இது எங்கள் நாடு, நீங்கள் வெளியேறுங்கள்': கனடா மக்களுக்கு காலிஸ்தான் மிரட்டல்
'இது எங்கள் நாடு, நீங்கள் வெளியேறுங்கள்': கனடா மக்களுக்கு காலிஸ்தான் மிரட்டல்
ADDED : நவ 15, 2024 05:30 AM

ஒட்டாவா: நம் நாட்டின் பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், தற்போது கனடாவில் அந்த நாட்டு மக்களை வெளியேறும்படி மிரட்டல் விடுத்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூனில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, இரு தரப்பு உறவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதுவரை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அடக்கி வாசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், வெளிப்படையாகவே செயல்படத் துவங்கினர். அந்த நாட்டில் உள்ள இந்திய துாதரகம் மீது தாக்குதல், இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் வன்முறை போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒடுக்கப்பட்டதை தொடர்ந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், ஓட்டு அரசியலுக்காக இந்தப் பிரச்னையில் பெரிய நடவடிக்கை எடுக்காமல், காலிஸ்தான் அமைப்புகளுக்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோ செயல்படுவதாக, மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், கனடாவின் சுர்ரே நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, 'இது எங்களுடைய நாடு. இங்குள்ள வெள்ளையர்கள், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள்' என, கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருந்து அந்நாட்டு மக்களையே வெளியேறும்படி, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கனடா அரசு கண்டும் காணாமல் இருப்பதால், தற்போது கனடாவையே கைப்பற்றும் முயற்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும்' என, நம் உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.