அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் பரிதாப பலி; 9 பேர் மாயம்
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் பரிதாப பலி; 9 பேர் மாயம்
ADDED : மே 06, 2025 06:22 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சாண்டிகோ நகரில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். 9 பேர் மாயமாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டிகோ நகரின் டோரி பின்ஸ் கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல் படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் படகில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் கடல்நீரில் மூழ்கினர். சம்பவ இடத்திலேயே 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 பேரை லேசான காயத்துடன், கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், 9 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
படகின் விபத்திற்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிறிய ரக மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தி வந்தனரா? வேறு நாட்டில் இருந்து அகதிகளை ஏற்றி வந்தனரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.