471 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 3 பிணைக் கைதிகள்; மற்றவர்களையும் மீட்க நெதன்யாகு உறுதி
471 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 3 பிணைக் கைதிகள்; மற்றவர்களையும் மீட்க நெதன்யாகு உறுதி
UPDATED : ஜன 20, 2025 07:04 AM
ADDED : ஜன 20, 2025 06:57 AM

ஜெருசலேம்: 471 நாட்களுக்குப் பிறகு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 3 பேர், இஸ்ரேல் வந்தடைந்தனர். மீதமுள்ள பிணைக்கைதிகளை மீட்பேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்தார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த 2023, அக்., 7ல் போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து துவங்கிய இந்தப் போர், பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், நேற்று மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின் அமலுக்கு வந்தது; இது, காசா பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாம்களில் இருந்து தங்களுடைய வீடுகளுக்கு மக்கள் திரும்பத் துவங்கினர். 471 நாட்களுக்குப் பிறகு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 3 பேரும், இஸ்ரேலில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர்.
ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் மற்றும் எமிலி டமரி ஆகியோர் இஸ்ரேலில் உள்ள தங்கள் தாய்மார்களுடன் மீண்டும் இணைந்தனர். அவர்கள் 3 பேரும் நலமாக இருக்கிறார்கள் என இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யார் இந்த 3 பேர்?
* 28 வயதான பிரிட்டிஷ்-இஸ்ரேலிய நாட்டவர் எமிலி. இவர் அக்டோபர் 7ம் தேதி 2023ம் ஆண்டு நடந்த, தாக்குதலின் போது பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். அவர் கையில் சுடப்பட்டு, வலுக்கட்டாயமாக காசாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
* காசாவின் வடமேற்கு எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் கபர் அஸாவில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து 31 வயதான டோரன் ஸ்டெய்ன்பிரேச்சர் என்ற கால்நடை செவிலியர் கடத்தப்பட்டார்.
* ரோமி கோனென் வடக்கு இஸ்ரேலில் உள்ள தனது வீட்டிலிருந்து நெகேவ் பாலைவனத்தில் நோவா இசை விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். ஹமாஸ் படையினர் மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவரை ஹமாஸ் படையினர் கடத்தி சென்றனர்.