ADDED : நவ 14, 2024 01:01 AM

செஞ்சுரியன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் திலக் வர்மா சதம் விளாச, இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று, மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நடந்தது.
இந்திய 'லெவன்' அணியில் அவேஷ் கான் நீக்கப்பட்டு ரமன்தீப் சிங் அறிமுகமானார். 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சாம்சன் ஏமாற்றம்
இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மார்கோ யான்சென் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் சஞ்சு சாம்சன் (0) போல்டானார். பின் இணைந்த அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஜோடி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சை பதம்பார்த்தது.
யான்சென் பந்தில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் திலக். ஜெரால்டு கோயட்சீ வீசிய 2வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய அபிஷேக், சிமெலேன் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்டார்.
'பவர்பிளே' ஓவரின் முடிவில் இந்திய அணி 70/1 ரன் எடுத்திருந்தது.
திலக் அபாரம்
தொடர்ந்து அசத்திய திலக் வர்மா, மார்க்ரம், கோயட்சீ பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். கேஷவ் மஹாராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக், 24 பந்தில் அரைசதம் எட்டினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது மஹாராஜ் 'சுழலில்' அபிஷேக் (50 ரன், 5 சிக்சர், 3 பவுண்டரி) சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1), சிமெலேன் 'வேகத்தில்' வெளியேறினார். பொறுப்பாக ஆடிய திலக், 32 பந்தில் அரைசதம் எட்டினார். ஹர்திக் பாண்ட்யா (18) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய திலக், மஹாராஜ் வீசிய 15வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, இந்திய அணி 150 ரன்னை கடந்தது.
கோயட்சீ வீசிய 16வது ஓவரில் திலக் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 21 ரன் கிடைத்தன. சிபம்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய திலக், சர்வதேச 'டி-20' அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ரமன்தீப் சிங் (15) 'ரன்-அவுட்' ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்தது. திலக் (107 ரன், 56 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி), அக்சர் படேல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மஹாராஜ், சிமெலேன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
திரில் வெற்றி :
கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, கடைசி வரை போராடியது. இருப்பினும் 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டும் எடுத்து, 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.