ஒரு மாசம் கூட ஆகலையே; எப்16 ரக விமானம் போச்சு; உக்ரைன் ராணுவம் புலம்பல்
ஒரு மாசம் கூட ஆகலையே; எப்16 ரக விமானம் போச்சு; உக்ரைன் ராணுவம் புலம்பல்
UPDATED : ஆக 30, 2024 10:51 AM
ADDED : ஆக 30, 2024 10:37 AM

கீவ்: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எப்16 ரக விமானம் நாட்டிற்கு வந்த சில வாரங்களில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது உக்ரைன் ராணுவத்தினரை வேதனைப்பட வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் உக்ரைன் விமானி உயிரிழந்தார்.
ரஷ்யா - உக்ரைன் போர், இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கணிசமான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி விட்டது. அது மட்டுமின்றி தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.இதை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தை எதிர்த்துப் போரிட தங்களுக்கு எப் 16 ரக விமானங்கள் வேண்டும் என்று உக்ரைன், பல மாதங்களாக அமெரிக்காவிடம் வற்புறுத்தி வந்தது.
ஆனால், தங்கள் தயாரிப்பு எப் 16 விமானத்தை கொடுத்தால் ரஷ்யா கொந்தளிக்குமே என்று பயந்து அமெரிக்கா பல மாதங்களாக இழுத்தடித்தது. ஆனால், உக்ரைன் அதிபரின் விடாப்பிடியாலும், போரில் ரஷ்யாவுக்கு வெற்றி வாய்ப்பு போய் விடக்கூடாது என்ற எண்ணத்தாலும், கடந்த மாதம் விமானங்களை வழங்கியது.
விமானி பலி
இப்படி வழங்கப்பட்ட எப்16 ரக விமானம் 2 நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கியது. ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ளும்போது நடந்த விபத்தில் விமானம் நொறுங்கியதா, ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதா என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.இதில் விமானி மூன்பிஷ் கொல்லப்பட்டார்.
விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. எப்16 விமான விபத்து உக்ரைனுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. இது பற்றி எப் 16 தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நேரடி ஆய்வுக்கும் ஒத்துழைப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
புலம்பும் ராணுவத்தினர்
விலை மதிப்பு மிக்க எப் 16 விமானம், ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போரிடுவதற்கு பேருதவியாக இருந்தது. தங்கள் ராணுவத்துக்கு பக்க பலமாக இருக்கும் என்று நினைத்திருந்த வேளையில் இப்படி நொறுங்கிப்போனது வேதனையாக இருப்பதாக, உக்ரைன் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர்.