பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்: துப்பாக்கி குண்டுக்கு பலியான இந்திய மாணவர்
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்: துப்பாக்கி குண்டுக்கு பலியான இந்திய மாணவர்
ADDED : நவ 22, 2024 07:26 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாடிய தெலுங்கனா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர், அவர் வைத்து இருந்த துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் உப்பால் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் ரெட்டி. இவரது மகன் ஆர்யன். இவர்களது பூர்வீகம் புவனகிரியாக இருந்தாலும், தற்போது உப்பாலில் வசித்து வருகின்றனர். ஆர்யன், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள கன்சாஸ் பல்கலையில் 2023ம் ஆண்டு சேர்ந்தார். முதுகலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியை லைசென்ஸ் வாங்கி வைத்து உள்ளார். கடந்த 13ம் தேதி பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.
அப்போது துப்பாக்கியை எடுத்து சுத்தப்படுத்தினார். எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கியில் இருந்த குண்டு அவரது மார்பில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு வந்த நண்பர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆர்யனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆர்யன் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இன்று பெற்றோரை பார்க்க வருவதாக ஆர்யன் கூறியிருந்தார். மகனை பார்க்க போகும் மகிழ்ச்சியில் இருந்த பெற்றோரிடம், அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கூறுகையில், அங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி வைத்து இருக்க மாணவர்களுக்கு லைசென்ஸ் கொடுப்பார்கள் என தெரியாது. இது போன்ற துயரம் மற்ற பெற்றோருக்கு நடக்கக்கூடாது என வேதனை தெரிவித்தனர்.