2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தில் ரயில் : சீனா புதிய உலக சாதனை
2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தில் ரயில் : சீனா புதிய உலக சாதனை
ADDED : டிச 27, 2025 01:03 AM

பெய்ஜிங்: 2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சீனா புதிய உலக சாதனைபடைத்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் மேக்னெடிக் லெவிடேஷன் எனப்படும் மெக்லெவ்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒரு டன் எடை கொண்ட ரயிலை 2 நொடிகளில் மணிக்கு 700 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினர்.சோதனை வெற்றிகரமாக நடந்தேறியது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சீனா அதிவேக காந்தப்புல மிதவை தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னணி நிலையை அடைந்துள்ளது என்றும், இது வெற்றிடக் குழாய் போக்குவரத்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது என்றனர்.
மேக்லெவ் தொழில்நுட்பம், ரயில்களை தண்டவாளத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் செல்ல மின்காந்தங்களைப் பயன்படுத்துகிறது. இது உராய்வைத் தவிர்த்து, மிக அதிக வேகத்தில் பயணிக்க உதவுகிறது. இந்த வெற்றியின் மூலம் அதிவேக மேக்லெவ் அமைப்புகளில் சீனா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொழில்நுட்பம் அதிவேக ரயில் தவிர, விண்வெளிக்கு ராக்கெட் ஏவுதல்களுக்கும் உதவக்கூடும். இது எரிபொருள் நுகர்வைக் குறைத்து, அதிவேக பயணத்திற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

