பள்ளத்தில் விழுந்த லாரி டிரைவர்: ஜப்பானில் போராடி வரும் மீட்பு குழுவினர்
பள்ளத்தில் விழுந்த லாரி டிரைவர்: ஜப்பானில் போராடி வரும் மீட்பு குழுவினர்
ADDED : ஜன 30, 2025 08:45 PM

டோக்கியோ: ஜப்பானில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த லாரி டிரைவரை மீட்க, மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.
கடந்த இருதினங்களுக்கு முன் காலையில் யாஷியோ நகரின் சாலையில் திடீரென பள்ளம் உருவானது. அப்போது அந்த வழியில் வந்த லாரி, பள்ளத்தில் விழுந்துவிட்டது. லாரியை ஓட்டி வந்த 74 வயது டிரைவர் கேபினில் சிக்கிக்கொண்டார்.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரை மீட்பதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கின. தீயணைப்பு வீரர்கள் இரவுபகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கிரேன் மூலம் லாரியை அப்படியே தூக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் லாரியின் பாரம் ஏற்றும் பகுதி மட்டுமே மீட்கப்பட முடிந்தது. கேபின் பகுதி பள்ளத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டதால் மீட்க முடியவில்லை.
டிரைவருடன் தொடர்ந்து பேசி அவரை நம்பிக்கையுடன் இருக்கும்படி தீயணைப்பு வீரர்கள் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல நிலைமை மோசமாகிவிட்டது.
டிரைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
சாலையின் அடியில் செல்லக்கூடிய கழிவு நீர் குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதனால் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட இந்த சாலையில் அமைக்கப்பட்ட கழிவு நீர் குழாய், 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.
அதனால் கழிவு நீர் குழாயும், அதன் மீது அமைக்கப்பட்ட சாலையும் வலு இழந்து இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மீட்பு பணியானது 24 மணி நேரத்தை கடந்த நிலையிலும், பள்ளத்தில் லாரியுடன் விழுந்த டிரைவரை மீட்க முயற்சி விடை தெரியாமல் இருப்பது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

