இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை: ஒப்புக்கொண்டார் கனடா பிரதமர்
இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை: ஒப்புக்கொண்டார் கனடா பிரதமர்
ADDED : அக் 17, 2024 06:59 AM

ஒட்டாவா: நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு செப்டம்பரில் குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளை கனடா தொடர்புபடுத்தியது. இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது. இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் தான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இது குறித்து, சமீபத்தில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் கேள்வி எழுப்பி இருப்பேன். ஆனால் அதை நாங்கள் தவிர்த்தோம்.
இறையாண்மை
நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தோம். இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை. இணைந்து பணியாற்றி ஆதாரத்தை கண்டறியலாம் என தெரிவித்தோம். இதற்கு இந்தியா முன்வரவில்லை. விசாரணைக்கு இந்தியா சிறிதும் ஒத்துழைக்கவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான கருத்துடைய கனடா நாட்டவர்கள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சேகரித்துள்ளனர். இறையாண்மையை இந்தியா மீறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.