வரிவிதிப்பு விவகாரம்; அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
வரிவிதிப்பு விவகாரம்; அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
ADDED : நவ 22, 2025 08:15 PM

வாஷிங்டன்: வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டியும், ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார்.
'அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, சர்வதேச நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் தன் இஷ்டப்படி கூடுதல் வரி விதித்தது சட்டவிரோதமானது' என, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து அதிபர் டிரம்ப் தரப்பில் அமெரிக்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகம் அவசர அவசரமாக மாற்று வழிகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் வரிவிதிப்பை சுப்ரீம் கோர்ட்டும் ரத்து செய்து விட்டால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடி அதிபர் டிரம்புக்கு ஏற்படும். எனவே, முன்கூட்டியே, புதிய வரிகளை வகுக்கும் பணிகளில் அமெரிக்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

