பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை: மருத்துவமனைகளை நாடும் இந்திய கர்ப்பிணிகள்
பிறப்பால் குடியுரிமை பெற டிரம்ப் தடை: மருத்துவமனைகளை நாடும் இந்திய கர்ப்பிணிகள்
ADDED : ஜன 23, 2025 08:26 PM

வாஷிங்டன்: பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பிப்.,19 ல் நடைமுறைக்கு வர உள்ளதால், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணிகள் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.
வழங்க முடியாது
அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பிப்., 19 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்காலிகமாக எச்.1பி மற்றும் எல்1 விசா பெற்று வசித்து வருகின்றனர். ஏராளமானோர், நிரந்தர குடியுரிமை அளிக்கும் கிரீன்கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தற்போது டிரம்ப்பின் புது உத்தரவு காரணமாக ஏராளமான தாய்மார்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் ஏராளமான தாய்மார்கள் டாக்டர்களை அணுகி உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வரும் பிப்.,19க்குள் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது: ஏராளமான கர்ப்பிணிகள் எங்களை தொடர்பு கொண்டு முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வதுகுறித்து கேட்கின்றனர். ஒரு சிலருக்கு கர்ப்ப காலம் முடிவடைய இன்னும் மாதம் உள்ளது.ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் கணவருடன் வந்து, முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பேசினார். அவருக்கு குழந்தை பிறக்க மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. அதுவரை காத்திருக்க அவர் விரும்பவில்லை.
முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் இருந்தாலும், அதனால், தாயார் மற்றும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படும். போதிய நுரையீரல் வளர்ச்சிஇல்லாதது, தாய்ப்பால் கொடுப்பது, எடை குறைந்த குழந்தை பிறப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.