தேசிய அவசர நிலை பிரகடனம்; ஒப்புக்கொண்டார் டிரம்ப்!
தேசிய அவசர நிலை பிரகடனம்; ஒப்புக்கொண்டார் டிரம்ப்!
ADDED : நவ 19, 2024 12:03 PM

வாஷிங்டன்: தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தவும், ராணுவத்தை பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக, அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டவிரோதமாக குடியேறிவர்களை விரட்டி அடிப்பேன் என தனது கொள்கையை டிரம்ப் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, 'அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்' என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த சூழலில், ட்ரூத் சோசியல் மீடியாவில், ' டிரம்ப் தலைமையிலான ஆட்சியில், தேசிய அவசரநிலை கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்களை நாடு கடத்த உள்ளார்' என ஒருவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு பதில் அளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்த பதில் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.