சீனா, ரஷ்யாவுடன் உறவை முறிக்க வெனிசுலாவுக்கு டிரம்ப் நிபந்தனை
சீனா, ரஷ்யாவுடன் உறவை முறிக்க வெனிசுலாவுக்கு டிரம்ப் நிபந்தனை
ADDED : ஜன 08, 2026 04:17 AM

வாஷிங்டன்: 'வெனிசுலாவின் இடைக்கால அரசு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனில் சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவை முறிக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் மதுரோ. இவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தி, அமெரிக்க படையினர் அந்நாட்டிற்கே சென்று மதுரோவை சிறைபிடித்து அழைத்து வந்தனர்.
தற்போது மதுரோ மற்றும் அவரது மனைவி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பின், 'வெனிசுலா நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும்; எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்போம்' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரோ கைதுக்கு பின் வெனிசுலா இடைக்கால அரசின் அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
வெனிசுலாவில் 30,000 கோடி பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இவை கனரக கச்சா எண்ணெய். அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இவற்றை சுத்திகரிப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பம் கொண்டவை.
அதிக அளவு எண்ணெய் இருப்பு இருந்தாலும், அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் நவீனமடையாத சுத்திகரிப்பு நிலையங்களால், நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. இதை அதிகரிக்க அமெரிக்கா உதவும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதற்கு பல நிபந்தனைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது. அதன் விபரம்:
சீனா, ரஷ்யா, ஈரான், கியூபாவை வெனிசுலாவின் எண்ணெய் தொழில்களில் இருந்து வெளியேற்றி, அவற்றுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுடன் மட்டுமே கூட்டு சேர வேண்டும். அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
வெனிசுலா பொருளாதார தடையால் விற்பனை செய்ய முடியாமல் வைத்திருக்கும் 3 முதல் 5 கோடி பீப்பாய் அளவிலான கச்சா எண்ணெய், நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும்.
தற்போதைய சந்தை விலையில் இதன் மதிப்பு, 18,000 கோடி ரூபாய். இதன் கட்டுப்பாடு அதிபர் டிரம்பிடம் இருக்கும். அவற்றை வெனிசுலா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு அவர் பயன்படுத்துவார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

