3வது முறையாக அதிபர் ஆவதை தடுக்கும் அமெரிக்க சட்டம் மோசமானது; டிரம்ப் காட்டம்
3வது முறையாக அதிபர் ஆவதை தடுக்கும் அமெரிக்க சட்டம் மோசமானது; டிரம்ப் காட்டம்
ADDED : அக் 29, 2025 11:13 AM

வாஷிங்டன்: 3வது முறையாக நான் அமெரிக்க அதிபர் ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
79 வயது நிறைந்த டிரம்ப், மீண்டும் ஒருமுறை (3வது முறை) அதிபராக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் அதை மிகவும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்தின்படி யாரும் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. அதாவது ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபராக தேர்வு செய்ய முடியாது.
இந் நிலையில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்கிறார். அங்கு செல்லும் முன்பாக தமது விமானத்தில் நிருபர்களிடம் பேசும் போது, அதிபராக மீண்டும் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டிரம்ப் அளித்த பதில் வருமாறு; நான் உண்மையில் அதை பற்றி யோசிக்கவே இல்லை. இதுவரை நான் பெற்ற ஓட்டு சதவீதத்தில் இப்போது அதிக ஓட்டு சதவீதம் பெற்றிருக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அமெரிக்காவின் சட்டம் 3வது முறையாக ஒருவர் அதிபராக போட்டியிடுவதை தடை செய்கிறது. இது மிகவும் மோசமானது என்று கூறினார்.
கடந்த வாரம் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பான்சன், பேட்டி ஒன்றில் டிரம்பை 3வது முறையாக அதிபராக பதவியேற்க செய்யும் திட்டம் உள்ளது என்று கூறியிருந்தார். அதே சமயத்தில், சபாநாயகர் மைக் ஜான்சன், அரசியலமைப்பை திருத்த தனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அதை திருத்தம் செய்ய எப்படியும் 10 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

