என் தலைமுடி இல்லாத மோசமான போட்டோ; பிரபல பத்திரிகையை விளாசிய டிரம்ப்
என் தலைமுடி இல்லாத மோசமான போட்டோ; பிரபல பத்திரிகையை விளாசிய டிரம்ப்
ADDED : அக் 15, 2025 07:15 AM

வாஷிங்டன்: தலைமுடி இல்லாத தனது போட்டோவை வெளியிட்டு விட்டதாக டைம் பத்திரிகையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டித்துள்ளார்.
புகழ்பெற்ற டைம் பத்திரிகை டிரம்ப் பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல், எகிப்து உச்சி மாநாடு மற்றும் மத்திய கிழக்கில் பெற்ற வெற்றி டிரம்பின் 2வது பதவி காலத்தில் நிகழ்த்திய சாதனை என்று அந்த கட்டுரையில் பாராட்டி எழுதி இருக்கிறது.
பத்திரிகையின் அட்டை படத்தில் தலைமுடி அதிகம் இல்லாத அவரது புகைப்படத்தை வெளியிட்டு, காசா போரில் டிரம்பின் செயல்பாட்டை பாராட்டி எழுதி இருக்கிறது.
பாராட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவரது போட்டோ தற்போது பெரும் விமர்சனங்களுக்கு இலக்காகி உள்ளது. தலைமுடி இல்லாத போட்டோவை டைம் பத்திரிகை வெளியிட்டு உள்ளதே இதற்கு காரணம். பாராட்டுகள் கூறி இருந்தாலும், மிக மோசமான போட்டோ என்று கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டிரம்ப்.
இதுகுறித்து அவர் தமது சோஷியல் ட்ரூத் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது;
டைம் பத்திரிகை என்னைப் பற்றி ஒப்பீட்டளவில் நல்ல கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் கட்டுரைக்காக வெளியிட்டுள்ள அட்டை படம் மிகவும் மோசமானதாக இருக்கிறது. என் தலைமுடியை அவர்கள்(டைம் பத்திரிகை) மறைத்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள்?
இவ்வாறு டிரம்ப் தமது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார்.
டிரம்புக்கும், டைம் பத்திரிகைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அதனுடன் அவர் இப்படி மோதுவது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை எலான் மஸ்க் உடன் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை டைம் பத்திரிகை வெளியிட்டு இருந்தது.
அதை சுட்டிக்காட்டி, டைம் பத்திரிகை இன்னமும் வெளியாகிக் கொண்டு இருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தது, குறிப்பிடத்தக்கது.