ADDED : ஏப் 02, 2026 05:49 PM

புதுடில்லி: 'இந்தியாவை புறக்கணித்து, பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு மதிப்பளித்தது, அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று' என, ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் கூறினார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை தேவையின்றி புறக்கணித்து, பாகிஸ்தானுக்கு மதிப்பளித்தது, அவர் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. முதலில் இந்தியாவுக்கு தண்டனை தரும் வகையில் இறக்குமதி வரிகளை விதித்தார்.
பின் இந்தியா - பாகிஸ்தான் போரை தானே தீர்த்ததாகக் கூறினார். அதன் பின் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து வைத்தார்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு இவ்வாறு மதிப்பளித்தது, இந்தியாவை தேவையின்றி புண்படுத்தியுள்ளது. அவரது வெளியுறவு கொள்கை ரசிக்கும் படி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
