இல்லாத போரை நிறுத்திய டிரம்ப் ஐரோப்பிய தலைவர்கள் கிண்டல்
இல்லாத போரை நிறுத்திய டிரம்ப் ஐரோப்பிய தலைவர்கள் கிண்டல்
ADDED : அக் 04, 2025 01:23 AM
கோபன்ஹேகன்:உலகில் நடக்காத போரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பால் மட்டுமே நிறுத்த முடியும் என்று ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது.
நகைச்சுவை இதில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், அல்பேனிய பிரதமர் எடி ராமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கு நடுவே இடைவேளையின் போது ஐரோப்பிய தலைவர்கள் உரையாடினர். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் நகைச்சுவையாக பேசினர்.
அதன்படி, அல்பேனிய பிரதமர் எடி ராமா, ஒருபோதும் நடக்காத போரை நிறுத்தியவர் டிரம்ப் மட்டும் தான் என்று கிண்டலுடன் கூறினார்.
மேலும் ராமா, பிரான்ஸ் அதிபரிடம், ''நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்பேனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான போரை டிரம்ப் நிறுத்தியதற்கு நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை,'' என்று கிண்டலாக கூறினார்.
இதற்கு மேக்ரான், ''அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்று பதிலளித்தார். இதனால் அனைவரும் சிரித்தனர்.
உலக நாடுகள் இடையே ஏழு போர்களை நிறுத்தியதாகவும், இந்தியா -- பாகிஸ்தான் மோதலும் தன்னால் தான் முடித்து வைக்கப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இவ்வாறு ஏழு போர்களை நிறுத்தியதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
அஜர்பைஜான் - அல்பேனியா இடையே நீண்ட காலமாக நடந்த போர், தன் தலையீட்டால் நின்றதாக டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில், அல்பேனியா மற்றும் அஜர்பைஜான் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் இருந்தது. சமீபத்தில் இவ்விரு நாட்டு தலைவர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் பேசினார்.
நோபல் பரிசு அதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையேயான நீண்ட கால பிரச்னைக்கு, தான் தீர்வு கண்டதாக அறிவித்தார்.
ஆனால், நோபல் பரிசு குறித்து பேசும்போது, அல்பேனியா மற்றும் அஜர்பைஜான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறினார்.
இதையே இந்த தலைவர்கள் கிண்டலடித்து உள்ளனர்.