ADDED : ஜன 27, 2025 05:12 AM

வாஷிங்டன்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டு களை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா உள்ளிட்ட பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 7ல் போர் துவங்கியது. சமீபத்தில் இருதரப்பும் போரை நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.
இதில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கான, 2,000 பவுன்ட், அதாவது, 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
தற்போது அவற்றை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு, சமீபத்தில் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
'ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, இஸ்ரேல் ஏற்கனவே பணத்தை கொடுத்துள்ளதால், வெடிகுண்டுகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்' என, சமூக வலைதளத் பதிவில் டிரம்ப் கூறிஉள்ளார்.
இதற்கிடையே, போரால் சிதிலமடைந்துள்ள காசா பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அங்குள்ள மக்கள் அகதிகளாக வரும்போது ஏற்கும்படி, பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளான ஜோர்டான், எகிப்து ஆகியவற்றை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.