ரூ.55,000 கோடி இழந்த டிரம்ப் நிறுவனம்: தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி மாற்றம்
ரூ.55,000 கோடி இழந்த டிரம்ப் நிறுவனம்: தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி மாற்றம்
ADDED : ஏப் 22, 2026 10:53 PM

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 55,000 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்ததால், அதன் தலைமை நிர்வாக அதிகாரி டெவின் நுன்ஸ் மாற்றப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்ப நிறுவனம் 'டிரம்ப் மீடியா'. கடந்த 2021ல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்த போது 'கேபிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்துக்குள் புகுந்து அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிபர் டிரம்பின் சமூக வலைதள பக்கங்களை பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முடக்கின. இதற்கு மாற்றாக 'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் டிரம்ப் புதிய சமூக வலைதளத்தை துவக்கினார். இது டிரம்ப் மீடியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் எம்.பி-யுமான டெவின் நுன்ஸ் செயல்பட்டு வந்தார். அவரது நிர்வாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. மாறாக 9,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை பதிவு செய்தது.
இந்த செய்தி காரணமாக நவம்பர் 2024 துவங்கி தற்போது வரை டிரம்ப் மீடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 55,000 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. இது 67 சதவீத சரிவாகும். இதனால் ஏராளமான முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தனர்.
இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி நுன்ஸ் அப்பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். அதற்கான காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை. புதிய நிர்வாக அதிகாரியாக கெவின் மெக்கர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் டிரம்ப் மீடியா நிறுவனத்தின் ஆலோசகராக செயல்பட்டார். தொழில்நுட்ப துறையில் 20 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றவர்.
