என் உயிர் காத்த ஒற்றை தோட்டா; எலன் மஸ்க் நேர்காணலில் மனம் விட்டுப் பாராட்டிய டிரம்ப்!
என் உயிர் காத்த ஒற்றை தோட்டா; எலன் மஸ்க் நேர்காணலில் மனம் விட்டுப் பாராட்டிய டிரம்ப்!
ADDED : ஆக 13, 2024 08:07 AM

வாஷிங்டன்: என்னை கொல்ல நடந்த முயற்சியின் போது, ரகசிய போலீஸ் அதிகாரி விரைவாக செயல்பட்டு ஒற்றை தோட்டாவில் கொலையாளியை சுட்டு வீழ்த்தினார். அந்த செயல் தான் என்னை காப்பாற்றியது என்றார் முன்னாள் அதிபர் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார். அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக, உலகின் முன்னணி தொழிலதிபர் எலன் மஸ்க் அறிவித்தார். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.
நேர்காணல்
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 13) எலன் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர். எலன் மஸ்க் முதலில் கொலை முயற்சி குறித்து கேள்வி எழுப்பினார்.
டிரம்ப் அளித்த பதில்:
அது துப்பாக்கி குண்டு தான் என்பதும், என் காதில் பட்டுவிட்டது என்பது எனக்கு உடனடியாக தெரிந்து விட்டது.துப்பாக்கி குண்டுகள் என் தலைக்கு மீது பறந்தன. நான் சற்று தலை சாய்ந்தபடியாக நின்றதால் தான், குண்டு காதில் பாய்ந்து இருக்கிறது; இல்லையெனில் நிலைமை மோசமாகி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதை தெரிவிக்கவே, உடனடியாக எழுந்து நின்றேன்.
சட்டவிரோதம்
அவர்கள் அதற்கு ஆரவாரம் செய்தனர். துப்பாக்கி சுடும் வீரரை தூரத்தில் இருந்து ஒரே தோட்டா மூலம் சுட்டுக் கொன்ற ரகசிய போலீஸ் பிரிவின் அதிகாரியை பாராட்டுகிறேன். உலகம் முழுவதிலும் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் அதிகரித்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
தொழில்நுட்ப கோளாறு
இந்திய நேரப்படி இன்று அதிகாலை, 5 மணியளவில் நடைபெற இருந்த நேர்காணல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் வரை தாமதமாக துவங்கியது. நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மற்றும் ஆளும் கட்சியை கடுமையாக சாடினார்.