கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டேன்: டிரம்ப் பேச்சு
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டேன்: டிரம்ப் பேச்சு
ADDED : ஜன 21, 2026 09:01 PM

டாவோஸ்: '' கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு அங்கம். அதனை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டேன். டென்மார்க் நன்றியற்ற முறையில் செயல்படுகிறது,'' என டாவோசில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வளர்ச்சி
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது: ஐரோப்பாவில் சில பகுதிகள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. பசுமை எரிசக்தியில் கவனம் செலுத்தியதாலும், பெருமளவில் குடியேற்றம் காரணமாகவும், ஐரோப்பா பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா சரியான திசையில் செல்லவில்லை. ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தனது கொள்கை காரணமாக நிலைமை மாறியுள்ளது. தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை. அதிக வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. முன்பு திறக்கப்பட்ட அபாயகரமான எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு உள்ளன.
ஐரோப்பிய மக்கள் மீது அமெரிக்கா அக்கறை கொண்டு உள்ளது. ஐரோப்பாவும், பிரிட்டனும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஐரோப்பாவின் எரிசக்தி இருப்பு நிலைகள் பேரழிவு தரும் வகையில் குறைந்துவிட்டது. இந்த நிலைக்கு இடதுசாரி கொள்கைகளே காரணம்.
'பழைய பல்லவி'
அமெரிக்க வரலாற்றில் எனது நிர்வாகம், குறிப்பிடத்தக்க வைக்கும் அளவுக்கு மாற்றங்களை செய்து வருகிறது. மற்ற நாடுகள் போட்டி போடாத வகையில் பொருளாதார வளர்ச்சி அடைவது உறுதி. ஒவ்வொரு எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்காவுக்கு வருகின்றன. வெனிசுலாவுக்கு அதிக பணம் கிடைக்கப் போகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் உட்பட 8 போர்களை ஒராண்டில் நிறுத்தி வைத்துள்ளேன்.
விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளேன். உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை கையாண்டு வருகிறேன். உக்ரைனில் ரத்த ஆறு ஓடுகிறது. போரை நிறுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன்.
நன்றியற்ற முறை
கிரீன்லாந்து முக்கியமான இடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. அமெரிக்காவை தவிர வேறு எந்த நாடும் பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நன்றியற்ற முறையில் நடந்து கொள்கிறது.
நேட்டோ அமைப்பிடம் இருந்து கிடைப்பதை விட, அதிகமாக அமெரிக்கா அளித்து வருகிறது. கிரீன்லாந்தை கையகபடுத்துவது தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தை நேடோ அமைப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது. மாறாக அந்த அமைப்பை வலுப்படுத்தும். கிரீன்லாந்து குறித்து விவாதிக்க பேச்சுவார்த்தைக்கு தயார். இது பரந்த பாதுகாப்பு நலன்களுடன் ஒத்துப்போகும் நடவடிக்கை.
எந்தவொரு நாடும் அமெரிக்காவவின் முன்மொழிவுகளுக்கு சரி அல்லது இல்லை எனக்கூறலாம். ஆனால், அவர்களின் பதிலை அமெரிக்கா நினைவில் வைத்து இருக்கும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுகிறது.
முட்டாள்தனம்
கிரீன்லாந்து அமெரிக்காவின் பிராந்தியம். அது அமெரிக்காவின் வடக்கு பகுதியின் ஒரு அங்கம், அதனை கையகபடுத்த ராணுவத்தை பயன்படுத்தமாட்டேன். அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை டென்மார்க்கிடம் இருந்து கைப்பற்றுவதே லட்சியம். அமெரிக்காவின் பொருளாதாரம் வளரும் போது உலக நாடுகளின் பொருளாதாரம் வளரும். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் திருப்பி அளித்ததில் அமெரிக்கா முட்டாள்தனமாக நடந்து கொண்டது. இவ்வாறு டிரம்ப் பேசினார்.

