மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கர்கள் 9 ஆயிரம் பேர் நாடு திரும்பினர்; அதிபர் டிரம்ப்
மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கர்கள் 9 ஆயிரம் பேர் நாடு திரும்பினர்; அதிபர் டிரம்ப்
ADDED : மார் 04, 2026 08:57 AM

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவிற்கு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் மீது, அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு நாட்டிற்கிடையேயும் தற்போது நேரடி போர் மூண்டுள்ளது. மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாதுகாப்பு அபாயங்கள் உள்ளதால் பெரும்பாலான மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். நீங்கள் மத்திய கிழக்கில் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்து, நீங்கள் வீடு திரும்ப விரும்பினால், தயவுசெய்து அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் இருக்கும் இடத்தை வெளியுறவுத்துறை அடையாளம் கண்டு, உங்களுக்கு பயணங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும். நாங்கள் ஏற்கனவே விமானங்களை இலவசமாக வாடகைக்கு எடுத்து வருகிறோம்.
மேலும் வணிக விருப்பங்களை முன்பதிவு செய்கிறோம். அமெரிக்கர்கள் 24 மணி நேரமும் +1-202-501-4444 என்ற எண்ணில் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

