ADDED : நவ 11, 2024 07:29 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், 'உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும்' என வலியுறுத்தினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வந்தார். ஏராளமான நிதியுதவி மற்றும் ஆயுதங்களை உக்ரைனுக்கு ஜோ பைடன் வழங்கினார்.
சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தோல்வியை தழுவியது. தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்துவேன் என பேசி வருகிறார். இதனை நடத்தி காட்டுவாரா? என உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினை தொடர்பு கொண்டு உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம். போரை கைவிட வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
'டிரம்புக்கும், புடினுக்கும் இடையிலான அழைப்பு குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதனை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ முடியாது' என உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோ கமென்ட்ஸ்
புடினுடனான டிரம்ப் தொலைபேசி அழைப்பு குறித்து, டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் இடம் கேட்ட போது, 'டிரம்ப் மற்றும் பிற நாட்டு தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட அழைப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என பதில் அளித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளால் தீண்டத்தகாத தலைவராக கருதப்படும் ரஷ்ய அதிபர் புடின் உடன், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் நேரடியாக போனில் பேசியிருப்பது, சர்வதேச அரசியலில் பேசு பொருள் ஆகியுள்ளது.