வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து; முஸ்லிம்களுக்கு நன்றி கூறிய டிரம்ப்
வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து; முஸ்லிம்களுக்கு நன்றி கூறிய டிரம்ப்
ADDED : மார் 28, 2025 01:55 PM

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் தனக்கு ஓட்டு போட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெள்ளை மாளிகையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகையையொட்டி அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகத்தின் சார்பில் வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆதரவு கொடுத்த ஆயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் கூறினார். மேலும், முஸ்லிம் சமூகத்தினருக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசு தொடர்ந்து செய்து கொடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது; மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சில முஸ்லிம் நாடுகளுக்கு இடையே, வரலாற்று சிறப்பு மிக்க ஆபிரகாம் உடன்படிக்கை சாத்தியமில்லாதது என்று அனைவரும் கூறினர். ஆனால், நாம் அதனை சாத்தியப்படுத்தினோம்.
முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றி, ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். உலகம் முழுவதும் அமைதியையே அனைவரும் விரும்புகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.