இந்தியா உள்ளிட்ட 'பிரிக்ஸ்' நாடுகளுக்கு 100 சதவீத வரி: டிரம்ப் எச்சரிக்கை
இந்தியா உள்ளிட்ட 'பிரிக்ஸ்' நாடுகளுக்கு 100 சதவீத வரி: டிரம்ப் எச்சரிக்கை
ADDED : டிச 02, 2024 02:22 AM

வாஷிங்டன்: தங்களுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தனைக்கான பொதுவான கரன்சியாக உள்ள டாலரை மாற்றினால், இந்தியா உட்பட, 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள ஒன்பது நாடுகளுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா அடங்கியது பிரிக்ஸ் அமைப்பு.
பரிவர்த்தனை
இந்த அமைப்பில், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா அங்கம் வகிக்காத மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக இது விளங்குகிறது.
கடந்தாண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது, அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்கு, டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
அல்லது பிரிக்ஸ் அமைப்புக்கென தனியாக பொதுவான கரன்சி உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறிப்பாக, ரஷ்யா, சீனா ஆகியவை இதை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், டாலருக்கு பதிலாக மாற்று கரன்சியை பயன்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை இந்தியா முன்வைத்துள்ளது. பரிவர்த்தனைக்கான கரன்சியை மாற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்தாண்டு ஜன., 2-0ல் பதவியேற்க உள்ளார். சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
டாலரை பொது கரன்சியாக பயன்படுத்துவதில் இருந்து விலக, பிரிக்ஸ் நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இதை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்து விட்டது.
அனுமதியில்லை
டாலரை மாற்ற மாட்டோம் அல்லது பொதுவான கரன்சியை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அளிக்க வேண்டும்.
டாலருக்கு மாற்றாக வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், 100 சதவீத வரியை அவர்கள் சந்திக்க நேரிடும்.
இதன்பின், அமெரிக்காவுடன் தொழில், வர்த்தகம் செய்ய முடியாது. அமெரிக்க பொருளாதாரத்தில் அந்த நாடுகள் இனி பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். டாலர் பயன்பாட்டை தவிர்க்கும் எந்த ஒரு நாட்டுக்கும் இந்த, 100 சதவீத வரி முறை பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.