அரிசியை குவிக்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை
அரிசியை குவிக்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப் எச்சரிக்கை
ADDED : டிச 10, 2025 12:47 AM

நியூயார்க்: ''அமெரிக்க உணவு சந்தையில், அதிக அளவிலான அரிசியை இந்தியா குவிக்கக்கூடாது; மீறினால், கூடுதல் வரி விதிப்பு வாயிலாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புகார்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் விவசாயம் மற்றும் விவசாயத்துறை பிரதிநிதிகள் உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், வேளாண் அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் உட்பட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அரிசி மிகவும் குறைந்த விலையில் அமெரிக்கவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற லுாசியானா உள்ளிட்ட தென் மாகாணங்களைச் சேர்ந்த அரிசி உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
மிகக்குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய் யப்படுவதால், உள்நாட்டு அமெரிக்க விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காமல், லாபம் ஈட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதை கேட்டுக்கொண்ட டிரம்ப், நிதியமைச்சரான பெசன்டிடம், 'ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதே, இருப்பினும், அரிசி எவ்வாறு அதிகளவில் இறக்குமதியாகிறது' என, கேள்வி எழுப்பினார்.
உறுதி
மேலும், அரிசிக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா எனவும் கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த பெசன்ட், இந்தியாவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இறக்குமதி நடப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து விவசாய பிரதிநிதிகளிடம், 'இதை நான் கவனித்துக் கொள்கிறேன். அரிசியை அதிகளவில் அமெரிக்காவுக்குள் குவிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதின் வாயிலாக இப்பிரச்னைக்கு எளிதாக தீர்வு காண முடியும்' என, உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, 'அமெரிக்காவுக்குள் அதிகளவில் அரிசியை இந்தியா இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். இந்திய அரிசிக்கு மட்டு மின்றி, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் உரங்கள் மீதும் கடுமையான வரி விதிக்கப்போகிறேன்' என்றார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதியில் அமெரிக்க சந்தையின் பங்கு 5 சதவீதம் தான். அமெரிக்காவின் மொத்த அரிசி இறக்குமதியில் இந்திய அரிசியின் பங்கு 26 சதவீதமாக உள்ளது.
தற்போதுள்ள, 50 சதவீதத்தையும் தாண்டி அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அமெரிக்க சந்தையில் இந்திய அரிசியின் விலையை அதிகரிக்கும். இது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நுகர்வோரை அதிகளவில் பாதிக்கும்.

