ADDED : ஜூலை 02, 2025 06:52 AM
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் கொண்டு வந்த அழகிய பெரிய மசோதா எனப்படும் செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா செனட் சபையில் நேற்று நிறைவேறியது.
இந்த மசோதாவில் மக்களுக்கான வருமான வரி, சிறு தொழில் வரி ஆகியவற்றை குறைத்துள்ளனர். இதனால், அரசுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் செலவு அதிகரிக்கும்.
ராணுவத்துக்கு மற்றும் புலம்பெயர்ந்தோர் கண்காணிப்புக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.
அதே சமயம் அரசு மருத்துவக் காப்பீடுக்கான செலவில் கை வைத்துள்ளனர். அரசின் கடன் உச்ச வரம்பை 40 லட்சம் கோடி அளவு உயர்த்துவது ஆகிய அம்சம் இதில் உள்ளது.
செனட்டில் இந்த மசோதாவின் 1,000 பக்க வரைவு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விவாதம் நடத்தி திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று இந்த மசோதாவுக்கு 50 பேர் ஆம் என்றும்; 50 பேர் இல்லை என்றும் ஓட்டளித்தனர்.
இதையடுத்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தன் 'டை பிரேக்கிங்' எனப்படும் சமநிலையில் இருக்கும்போது, முடிவை தீர்மானிக்கும் ஓட்டை பயன்படுத்தி மசோதாவை வெற்றிபெறச் செய்தார்
இது, அதிபர் டிரம்பின் கையெழுத்தை விரைவில் பெற்று சட்டமாகும்.