போர்ட்லாண்டு நகருக்கு படைகளை அனுப்பும் டிரம்ப் முடிவுக்கு தடை
போர்ட்லாண்டு நகருக்கு படைகளை அனுப்பும் டிரம்ப் முடிவுக்கு தடை
ADDED : அக் 06, 2025 03:35 AM

போர்ட்லாண்டு: அமெரிக்காவின் போர்ட்லாண்டு நகருக்கு மத்திய படைகளை அனுப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், படைகளை அனுப்புவதற்கு தற்காலிக தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ளது போர்ட்லாண்டு நகரம். இங்குள்ள குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அலுவலகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள், வன்முறை போராட்டங்கள், சேதங்கள் ஏற்படுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, கூட்டாட்சி மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்நகருக்கு மத்திய படைகளை அனுப்புவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓரிகான் மாகாண கவர்னரும், போர்ட்லாண்டு மேயரும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதி கரேன் ஜே.இமர்ஜூட் முன் விசாரணைக்கு வந்தது. அதிபர் டிரம்பின் நடவடிக்கை கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக உள்ளதாக மாகாண நிர்வாகமும், நகர நிர்வாகமும் வாதிட்டன.
இதையடுத்து நீதிபதி அளித்த தீர்ப்பில், மத்திய படைகளை அனுப்பும் அளவிற்கு போர்ட்லாண்டில் வன்முறைகளோ, சீர்குலைவு நடவடிக்கைகளோ எதுவும் நடைபெறவில்லை என்றும், அதிபர் டிரம்பின் நிர்வாகம், படைகளை அனுப்பும் முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்து, மத்திய படைகள் அனுப்பும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது-.
இந்த தற்காலிக தடை அடுத்தகட்ட வாதங்கள் துவங்கும் வரை, அதாவது வருகிற 18ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது-.