அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும்; கனடாவுக்கு டிரம்ப் ஆபர்!
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும்; கனடாவுக்கு டிரம்ப் ஆபர்!
ADDED : ஜன 07, 2025 08:44 AM

வாஷிங்டன்: கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும், 51வது மாநிலமாக ஆக வேண்டும் என்று கூறி வருகிறார். அவர் கூறுவதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. எனினும், டிரம்ப் தான் கூறுவதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
உட்கட்சியில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. 9 ஆண்டுக்கு மேலாக பிரதமராக இருக்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் பெருமளவு சரிந்து விட்டது. வரவிருக்கும் தேர்தலில் அவரது லிபரல் கட்சி தோல்வி அடையும் என்று பலரும் கணித்துள்ளனர்.
ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கினர்.இத்தகைய சூழ்நிலையில் தான் ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துவிட்டார்.
இது தொடர்பாக, வருங்கால அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவிடம் இருந்து, இனிமேல் மானியங்கள் உள்ளிட்டவை கனடாவுக்கு கிடைக்காது. இதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும். மேலும் ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றுபட்டால், அது எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.