பேசித் தீர்க்கப் பாருங்க; இந்தியாவின் அறிவுரை இதுதான்!
பேசித் தீர்க்கப் பாருங்க; இந்தியாவின் அறிவுரை இதுதான்!
ADDED : அக் 27, 2024 07:30 AM

புதுடில்லி: இரு தரப்பும் மோதிக்கொண்டே இருப்பதால் யாருக்கும் பயனில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இஸ்ரேல், ஈரானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்தாண்டு இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து, சரமாரியான ராக்கெட் தாக்குதல் நடத்தி 1,000 பேருக்கு மேல், கொன்று குவித்தது. பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் மீதும், அதற்கு ஆதரவு தரும் லெபனான் ஹிஸ்புல்லா குழுவினர், ஏமன் நாட்டின் ஹவுத்தி குழுவினர் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரான், கடந்த 1ம் தேதி, ஒரே நேரத்தில் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி பதில் தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் வகையில், நேற்று 100 ஜெட் விமானங்களை அனுப்பி, ஈரானின் ஏவுகணை தயாரிப்பு தளங்களை குண்டு வீசி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடித்து பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலை நாட்ட வேண்டும். போர் பதற்றம் நிலவும் பகுதியில் உள்ள எங்கள் தூதரகங்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளன.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.