அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் ராஜினாமா; காரணம் இதுதான்!
அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் ராஜினாமா; காரணம் இதுதான்!
UPDATED : மே 23, 2026 07:47 AM
ADDED : மே 23, 2026 07:19 AM

நமது சிறப்பு நிருபர்
தனது கணவர் அரிய வகை எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளதால், அவருக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட இருக்கிறேன். இதனால் உளவுத்துறை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக துளசி கபார்ட் அறிவித்துள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்ட் பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜினாமா கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து துளசி கபார்ட் கூறியிருப்பதாவது:
தனது கணவர் ஆபிரகாம் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவால்கள் காரணமாக வரும் நாட்களில்அவருக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதனால் பொதுச் சேவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். எங்கள் பதினொரு வருட திருமண வாழ்க்கை முழுவதும் எனது கணவர் எனக்கு ஒரு தூணாக இருந்து வருகிறார்.
சிறப்பு நடவடிக்கைப் பணிக்காக நான் கிழக்கு ஆப்ரிக்காவிற்கு அனுப்பப்பட்டபோதும், இப்போது இந்தப் பதவியில் நான் ஆற்றும்போதும் அவர் உறுதியாக நின்றார். அவருடைய பலமும் அன்பும் ஒவ்வொரு சவாலிலும் எனக்குத் துணையாக இருந்துள்ளன. நான் இந்த பதவியில் தொடர்ந்து இருக்கும்போது, அவர் தனியாக உடல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்வது, மனசாட்சிக்கு விரோதமாக என்னால் கேட்க முடியாது.
தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு அதிபர் டிரம்புக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு கடினமான இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு சேவை செய்யும் பெரும் கவுரவத்தை அளித்த உங்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் போர் குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், டிரம்பின் உளவுத்துறைத் தலைவர் பதவியிலிருந்து துளசி கபார்ட் ராஜினாமா செய்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது.
யார் இந்த துளசி கபார்ட்?
* ஹவாயைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினரான துளசி கபார்ட், டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
* அவர் தேசிய உளவுத்துறையின் எட்டாவது இயக்குநர் ஆவார்.
* 2013 முதல் 2021 வரை ஹவாய் மாகாணத்தின் சார்பாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக இருந்தார். ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியில் இருந்த இவர், 2022-ல் சுயேச்சையானார். பின்னர் 2024-ல் குடியரசுக் கட்சியில் இணைந்தார்.
* அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உறுப்பினரான முதல் இந்து என்ற பெருமையைப் பெற்றவர்.
