ADDED : மே 14, 2026 02:17 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கியும், கத்தாரும் இணைய உள்ளதாக பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
' நேட்டோ' எனப்படும் மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கூட்டணியில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். கூட்டணியில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து அந்த தாக்குதலை முறியடிக்க ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும்.
அப்படிப்பட்ட ' நேட்டோ' படைக்கு இணையாக, இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் ராணுவக் கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான அடித்தளம் கடந்த ஆண்டு நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் போடப்பட்டது.
தற்போது இந்த ஒப்பந்தத்தில் மேற்காசிய நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைவதற்கான பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வெறும் பெயரளவு கூட்டணி அல்ல, மாறாக நான்கு நாடுகளின் தனித்துவமான பலங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மெகா கூட்டணி என்று பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பின், தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு புதிய கூட்டணி தேவை என்பதை உணர்ந்தே இந்த நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளதாக சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம் இந்த ' இஸ்லாமிய நேட்டோ' கூட்டணி இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ஏனென்றால், துருக்கி ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகிறது.
கூட்டணி அமைந்த பின் பாகிஸ்தான் மீது இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதை ' கூட்டுத் தாக்குதல்' என்ற போர்வையில் மற்ற நாடுகளும் தலையிட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
