பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி
பிரிட்டன் யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 2 பேர் பலி
ADDED : அக் 02, 2025 05:34 PM

லண்டன் : பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் கிரம்ப்சால் என்ற பகுதியில் யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு அந்நாட்டு நேரப்படி காலை 9:30 மணியளவில் அங்கு பலர் கூடி வழிபாடு நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வழிபாட்டில் இருந்தவர்கள் மீது கத்தியால் குத்தத் துவங்கினார். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதில் முதலில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என சந்தேகிக்கப்படுவரை சுட்டுக் கொன்றனர்.
அந்த பகுதிக்கு ஆம்புலன்சுகளுடன் விரைந்த மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்து நடந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.