கிரீஸில் இரு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; இருவர் பலி
கிரீஸில் இரு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; இருவர் பலி
ADDED : ஆக 03, 2026 08:24 AM

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸூம் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். பயங்கர காற்று வீசுவதால், காட்டுத்தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. எனவே, இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்புத்துறையினருக்கு பெரும் சாவலாக இருந்து வருகிறது. இருப்பினும், ஹெலிகாப்டர்கள் மூலமாக காட்டுத்தீயை அணைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் ஏதென்ஸூக்கு மேற்கே உள்ள கடற்கரைப் பகுதியான சதாவில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. அதனை இயக்கி வந்த டென்மார்க் பைலட் மற்றும் க்ரீஸ் நாட்டு தீயணைப்பு அதிகாரி என இருவர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டர் அவசர அவசமாக தரையிறக்கப்பட்டதால் பைலட் உள்பட இருவர் உயிர் தப்பினர். இந்த சம்பத்திற்கு அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
