ADDED : டிச 27, 2025 12:38 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்னும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் இருப்பதாக, ஐ.நா., அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அகதிகளாக உள்ளனர்.
பா கிஸ்தானில் உள்ள அகதிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என, 2023ல் அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி, லட்சக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர்.
குறிப்பாக, கடந்த நவம்பரில் மட்டும், ஆப்கனைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். இரு ஆண்டுகளில், 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளதாக பாக்., அரசு தெரிவித்துள்ளது.
கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களில், 45 ஆண்டுகளாக இருந்த 50க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் முகாம்களையும், பாக்., அரசு மூடியது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள் நிலைமை, பொருளாதார நெருக்கடி ஆகியவை அகதிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால், பலர் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை.
அதன்படி, பாகிஸ்தானில் இன்னும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக இருப்பதாக ஐ.நா., அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது; அகதிகள் சொந்த விருப்பத்தின்படியே நாடு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

